விபத்தினை தவிர்க்கும் விதமாக ஆலங்குளத்தில் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

ஆலங்குளம், ஜன.9: தென்காசி மாவட்டம் ஆசாத் நகரில் துவங்கி நெல்லை பழையபேட்டை வரை சுமார் 45.60 கி.மீ.தூரம், தமிழக அரசு மற்றும் உலக வங்கி நிதிஉதவியுடன் ரூ.430.70 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக தமிழக அரசு 2015ம் ஆண்டு மே 19ம்தேதி அரசாணை பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து 2021 பிப்ரவரி மாதம் நான்கு வழிச்சாலை பணிகள் துவங்கியது. இந்த நான்கு வழிச்சாலை தென்காசி – நெல்லை மாவட்டங்களையும், கேரள மாநிலம் செல்லும் சாலையையும் இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் மத்தியில் ஆலங்குளம் பகுதி அமைந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் வளர்ந்து வரும் மிக முக்கிய நகரமாகும். ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி, தாலுகா, யூனியன் தலைநகரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது. இதனால் எப்போதும் சாலைகளில் மக்கள் கூட்டம் காணப்படும். இந்நிலையில் ஆலங்குளத்தில் காலை, மாலை, இரவு நேரங்களில் வாகனங்கள் போக்குவரத்து மிக அதிகமாக காணப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இந்த சாலையின் குறுக்கே சம்பந்தமில்லாத இடங்களில் பாதைகள் அமைத்தும், அதனருகில் தனியார் விளம்பரங்கள் அடங்கிய பேரிகார்டுகள் ஆகியவற்றை நெடுஞ்சாலை துறையினர் அமைத்துள்ளனர். மேலும் அந்த பேரிகார்டுகளில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வண்ணம் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டுவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பேரிகார்டுகளில் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதேபோன்று ஆலங்குளத்தில் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் வாறுகாலின் மேல்பகுதி வரை கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பு உள்ளது. அந்தக் கடைகளுக்கு வருபவர்கள் கடை முன் நான்கு வழிச்சாலையிலே தங்களது பைக்குகளை நிறுத்திவிட்டு செல்கின்றனர். ஒருபுறம் பேரிகார்டு மறுபுறம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் நான்கு வழிச்சாலையில் செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். இதனால் அடிக்கடி சிறுசிறு விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. மேலும் நெட்டூர் ரோடு, ஆலங்குளம் முக்கிய தெருக்களிலிருந்து மெயின் ரோட்டுக்கு வருபவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகையால் ஆலங்குளம் நகருக்குள் விபத்தினை தவிர்க்க நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலையில் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: