பாவூர்சத்திரம் அருகே அழகுமுத்துமாரியம்மன் கோயிலில் நாளை கொடியேற்றம்

பாவூர்சத்திரம், ஜன.10: பாவூர்சத்திரம் அருகே அருணாப்பேரியில் அமைந்துள்ள அழகுமுத்து மாரியம்மன் கோவிலில் 63ம் ஆண்டு திருவிழா நாளை (11ம்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று அதிகாலையில் 108 வேத விற்பன்னர்கள் பங்குபெறும் மஹா யாகசாலை பூஜையும், காலை 10 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அம்மன் சப்பரமானது 6ம் திருநாளான 16ம்தேதி மகிழ்வண்ணநாதபுரம், 17ம் தேதி பெத்தநாடார்பட்டி, பொட்டலூர், 18ம் தேதி நவநீதகிருஷ்ணபுரம், இலங்காபுரிபட்டணம், 19ம்தேதி நாகல்குளம் ஆகிய ஊர்களுக்கு வீதிஉலா செல்கிறது. முக்கிய நிகழ்வான 10ம் திருநாளான வரும் 20ம் தேதியன்று வில்லிசை, மேளம், செண்டாமேளம், கணில் ஆட்டம், மகுட ஆட்டம், கேரளா பக்தி இன்னிசையும், திரைப்பட இன்னிசை கச்சேரியும், கிராமிய பக்தி தெம்மாங்கு இசை நிகழ்ச்சியும், இரவு சிறப்பு அலங்காரத்தில் அழகு முத்து மாரியம்மன் சப்பர வீதி உலாவும், அதிகாலையில் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்வும், வாண வேடிக்கைகளும் நடைபெறுகிறது. விழாவில் அருணாப்பேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா சிவன்பாண்டி தலைமையில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: