சாத்தான்குளம், ஜன. 8: சாத்தான்குளத்தில் வீடுகளை சூழ்ந்துள்ள சிவப்பு நிற சிலந்தி வகை பூச்சியால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். எனவே அதிகாரிகள் பார்வையிட்டு பூச்சியின் தன்மை அறிந்து அதனை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். சாத்தான்குளம் ஜெபஞானபுரம் பகுதியில் உள்ள வீடுகளில் நேற்று முன்தினம் சிவப்பு நிறத்தில் சிறிய சிலந்தி வகையில் பூச்சிகள் அதிகமாக காணப்படுகிறது. முதலில் ஏதோ வண்டு இனம் தானாக போய் விடுமென பகுதி மக்கள் பார்த்துள்ளனர். ஆனால் நாளடைவில் இது அதிகரித்து வந்துள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி தெளித்துள்ளனர். ஆனால் மருந்து தெளிக்கப்பட்ட பகுதியில் பூச்சிகள் இறந்து போனது. மற்ற வீடுகளிலும் திண்ணை மற்றும் சுவர்களிலும் இவ்வகை பூச்சிகள் அதிகரித்து காணப்படுகிறது. இந்த பூச்சி கடித்தால் ஊறல் இருப்பதாகவும் இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே பேரூராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் பார்வையிட்டு ஜெபஞானபுரம் பகுதியில் அதிகரித்து வரும் பூச்சியின் தன்மையை அறிந்து, அதனை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
