செல்லாண்டியம்மன் கோயில் விழா காலங்களில் மக்கள் பயன்படுத்தும் இடத்தில் சமுதாயகூடம் கட்டக்கூடாது குடிபாட்டுமக்கள் கோரிக்கை

கரூர், மார்ச் 3: திருக்காம்புலியூர் மதுக்கரை செல்லாண்டியம்மன் திருவிழா காலங்களில் குடிபாட்டு மக்கள் பொங்கல் வைக்கும் இடத்தில் சமுதாய கூடம் கட்டக்கூடாது என்று கலெக்டரிடம் மனு அளித்தனர். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த முகாமில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா திருக்காம்புலியூர் பகுதி மக்கள் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:

திருக்காம்புலியூர் கிராமத்தில் உள்ள மாயனூர்  மதுக்கரை செல்லாண்டியம்மன் குடிபாட்டு மக்கள், எங்களைப் போல 7 மண்டகப்படியாளர்கள் உள்ளனர். நாங்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா நடத்தி வருகிறோம். மாசி மாதம் வீரப்பூர் திருவிழா ஒரு வாரம் நடைபெறும். இந்நிலையில், பக்தர்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அந்த இடத்தில் சமுதாய கூடம் அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த இடத்தின் அருகே விழா நடைபெறும் காலங்களில் பொங்கல் வைக்கவும், வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் உள்ளது. எனவே, நாங்கள் பயன்படுத்தும் இடத்தை தவிர்த்து மாற்று இடத்தில் சமுதாய கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: