மின் அமைப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

தர்மபுரி, மார்ச் 2:தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள், மத்திய சங்கம் சார்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் தர்மபுரியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவரும், மாநில துணை தலைவருமான ஜெயபால் தலைமை வகித்தார். மாநில செயலாளர் தாமோதரன் வரவேற்றார். மாநில பொது செயலாளர் கோவிந்தன், மாநில பொருளாளர் அப்துல்சத்தார், மாநில குடும்பநல அறக்கட்டளை செயலாளர் மணி, மாநில துணை தலைவர் குழந்தைவேலு, துணை செயலாளர் சிவலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் ஏழை, எளிய மக்களின் அனைத்து வீடுகளுக்கும், எந்த நிபந்தனையம் இன்றி புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும். தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் 150 எச்பி தாழ்வழுத்த மின் இணைப்புகளை, அதே மின்மாற்றியில் இருந்து 200எச்பி வரையில் உயர்த்தி தாழ்வழுத்த மின் இணைப்பு வழங்க வேண்டும்.

மின் ஒப்பந்ததாரர் உரிமம், தகுதிசான்றிதழ்கள் புதுப்பித்தல் போன்ற பணிகளை, ஆன்லைன் மூலம் புதுப்பிக்க வசதி ஏற்படுத்த வேண்டும். கட்டுமான வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு, 60 வயதுக்கு மேல் வழங்கப்படும் ₹1000 ஓய்வூதியத்தை விலை வாசி உயர்வை கருத்தில் கொண்டு, ₹3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கணேசன், கமலேசன், துரை, ஆசைதம்பி, வாசன் பழனி, செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: