தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மஞ்சள் நிற ஒட்டுப்பொறி

கோவை, பிப்.28: தென்னையில் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்த மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை பயன்படுத்த வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கோவை, பொள்ளாச்சி பகுதியில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதில், தற்போது பெரிய பிரச்னையாக வெள்ளை ஈ தாக்குதல் காணப்படுகிறது. இந்த ஈக்கள்  இலைகளின் அடிப்பரப்பில் வட்டம் அல்லது சுருள் வடிவில் முட்டைகள் இடுகிறது. முட்டையில் இருந்து வெளியேறும் குஞ்சுகள், 30 நாட்கள் வரை இலையில் சாறு உறிஞ்சி, ஈக்களாக மாறியதும், பல்வேறு திசைகளில் பறந்து சென்று பயிர்களை தாக்கி வருகிறது. இந்த ஈக்கள் வெளிப்படுத்தும் பசை போன்ற கழிவு திரவம், இலைகளின் மேல் படர்ந்து, கரும்பூஞ்சாணம் வளர வழி செய்கிறது. இதனால், கருப்பாக மாறும் தென்னை ஓலையில் பச்சையம் செயலிழந்து மகசூல் குறைகிறது. இந்த பிரச்னை புதியதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால், வெள்ளை ஈக்கள் நடமாட்டத்தை கண்டறிந்து அவசர கால நடவடிக்கையை மேற்கொள்ள வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, அவசர கால தடுப்பு மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகள் இந்த ஈக்களை கவரும் தன்மை கொண்டது. இரு மரங்களுக்கு இடையில் 3 மீட்டர் நீளம் மற்றும் 1 மீட்டர் அகலம் என்ற அளவிலான பாலீத்தினை தரையிலிருந்து 5-6 அடி உயரத்தில் விளக்கு எண்ணெய் தடவி கட்ட வேண்டும். இதனால் பூச்சிகளின் எண்ணிக்கை கட்டுப்படும். 3 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து மீண்டும் விளக்கு எண்ணெய் தடவி விட வேண்டும். இம்மஞ்சள் நிற ஒட்டும் பொறியை ஒரு மரத்தைச் சுற்றியும் கட்டிவிடலாம். ஏக்கருக்கு 20 என்ற எண்ணிக்கையில் மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை கட்டிவிடலாம்.

Advertising
Advertising

கிரைசோபர்லா இரை விழுங்கிகள், இந்த ஈக்களின் வளர்நிலையை உணவாக உட்கொள்ளும். இதை எக்டருக்கு ஆயிரம் என்ற எண்ணிக்கையில் விடவும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி வேப்பெண்ணெய் அல்லது அசாடிராக்டின் ஒரு சதம் மருந்தை ஒட்டுத்திரவத்துடன் கலந்து, தென்னை ஓலையின் அடிப்புறம் 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கலாம். மேலும், விவசாயிகள் அதிகளவில் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை வழிமுறைகளை கையாள்வது அவசியம். இதனால், வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த முடியும். கூடுதல் தகவலுக்கு விவசாயிகள் வேளாண் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறையை 0422-6611214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், கோவை வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தென்னைகளில் மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகள் வைத்து வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

Related Stories: