கோடை தொடக்கம் எதிரொலி வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும்

தர்மபுரி, பிப்.28: தர்மபுரி மாவட்டத்தில் கோடை எதிரொலியாக, உணவு தேடி  வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தர்மபுரி மாவட்டத்தில் 1600 சதுர கிலோமீட்டர் வனப்பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டுப்பன்றிகள், மான்கள், முயல்கள், 300க்கும் மேற்பட்ட யானைகள் மற்றும் சிறுத்தைகள் உள்ளன. தர்மபுரி மாவட்ட வனக்கிராமங்களுக்குள், பாலக்கோடு மற்றும் பென்னாகரம் வனப்பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதோடு, கர்நாடகா மாநில எல்லையில் இருப்பதால் உணவிற்கு பஞ்சம் இருப்பதில்லை. தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வனப்பகுதியில் திகிலோடு கிராமத்திலும், தர்மபுரி அருகே அதியமான்கோட்டை காலபைரவர் கோயில் எதிரே உள்ள ஒரு வாழை தோட்டத்திற்குள், கடந்த 5 ஆண்டுக்கு முன்பு சிறுத்தை வந்து பிடிபட்டது. அந்த சிறுத்தையை வனத்துறையினர், கர்நாடகா வனப்பகுதியான ராசிமணல் அருகே கொண்டு சென்று காட்டிற்குள் விட்டனர்.  இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பென்னாகரம் வனப்பகுதி சாலைகளில், உணவு தேடி  யானைகள் இரவு நேரங்களில் நடமாடி வருகின்றன. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வனக்கிராம மக்கள் கூறியதாவது:

 நல்லம்பள்ளிக்கு தெற்கே தொப்பூர் வனப்பகுதி, மேற்கே ஒகேனக்கல் வனப்பகுதி, தென்கிழக்கே வத்தல்மலை வனப்பகுதிகள் உள்ளன. கோடை காலங்களில் வனகிராமங்களுக்கு அடிக்கடி யானைகள் வருகின்றன. இதே போல், அடிக்கடி மான்கள் வழிதவறி இப்பகுதிக்குள் வந்துவிடுகின்றன. அவற்றை நாங்கள் விரட்டுகிறோம். இரவு நேரங்களில் ஓநாய் போன்றவைகளும், கோழிகளை தின்பதற்காக ஊருக்குள் வந்துவிடுகின்றன. அதேபோல், ஒரு வருடத்திற்கு 10க்கும் மேற்பட்ட ஆடு மாடுகளை வரிநாய்கள் கடித்து சேதப்படுத்தி விடுகின்றன. எனவே, உணவு மற்றும் தண்ணீருக்காக, வனத்தில் இருந்து வெளியேறும் யானை உள்ளிட்ட வன விலங்குகளிடம் இருந்து, கிராம மக்களை காப்பாற்ற, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: