புகைச்சான்று இல்லாமல் இயங்கும் வாகனங்களால் விபத்து இழப்பீடு பெறுவதில் சிக்கல்

கோவை, பிப்.26: நாடு முழுவதும் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 847 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோவையில் கடந்த ஓர் ஆண்டில் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 10 முதல் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப வாகன புகையால் ஏற்படும் காற்று மாசும் அதிகரித்து வருகிறது.இவ்வாறு காற்று மாசடைவதை தடுக்கும் நோக்கில் மாசு கட்டுப்பாடு சான்று இல்லாத வாகனங்களின் காப்பீட்டை புதுப்பிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவைத் தொடர்ந்து காப்பீட்டு ஒழுங்குமுறை அமைப்பான ஐஆர்டிஏஐ, அனைத்து பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கும் அமல்படுத்த உத்தரவிட்டது. அதில், வாகனம் வெளியிடும் புகையின் அளவு அரசு விதிமுறைப்படி கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை தெரியப்படுத்தும் சான்று இல்லாத வாகனங்களுக்கு காப்பீட்டை புதுப்பிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

உத்தரவு அமலாகி  பல மாதங்கள் ஆகியும் போதிய விழிப்புணர்வு இல்லாததால் தமிழகத்தில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் மாசு கட்டுப்பாடு சான்று இல்லாமல் வாகனங்களை இயக்கி வருகின்றனர். அவ்வாறு இயங்கி வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கினால் இழப்பீடு கிடைக்க வாய்ப்பில்லை என பொதுத்துறை காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து காப்பீட்டுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஐஆர்டிஏவின் புதிய உத்தரவுப்படி எந்த ஒரு வாகனத்துக்கும் காப்பீடு பெற மாசு கட்டுப்பாடு சான்று அவசியம். ஆனால், காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது 5 சதவீதம் பேரிடம்கூட மாசுக் கட்டுப்பாட்டு சான்று இருப்பதில்லை.எனினும், அவர்களுக்கு காப்பீடு மறுக்கக்கூடாது என்பதால், ‘எனது வாகனத்துக்கு முறையான மாசுக் கட்டுப்பாடு சான்று உள்ளது’ என்ற உறுமொழி படிவத்தில் கையெழுத்து பெற்றுவிட்டு காப்பீடு அளித்து வருகிறோம். அதன்பிறகு, வாகன உரிமையாளர்கள் கண்டிப்பாக மாசு கட்டுப்பாடு சான்றை பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த சான்றை 6 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

ஒருவேளை வாகனம் ஏதேனும் விபத்தில் சிக்கினால், வாகன சேதத்துக்கான இழப்பீடு கோரும்போது, மாசு கட்டுப்பாடு சான்று இல்லையெனில் அவர்களுக்கு நிச்சயம் இழப்பீடு அளிக்க முடியாது. அதே காப்பீடு செய்யப்பட்ட வாகனம் வேறு யார் மீதாவது மோதினால், மாசுக் கட்டுப்பாடு சான்று இல்லையென்றாலும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி அவர்கள் இழப்பீடு வழங்க உத்தரவிட வாய்ப்பில்லை.  எனவே அனைத்து வாகன உரிமையாளர்களும் உரிய சான்றை வைத்துக்கொள்ள வேண்டும்,என தெரிவித்தார்.இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், மாசு கட்டுப்பாடு சான்றை அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாகன புகை பரிசோதனை மையங்களில் வாகன ஓட்டிகள் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக தமிழகம் முழுவதும் 332 அங்கீகாரம் பெற்ற பரிசோதனை மையங்கள் உள்ளன. அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்து வருகின்றனர், புகை சான்று இல்லாத வாகனம் ஏதேனும் விபத்தில் சிக்கினால் வாகன சேதத்துக்கான இழப்பீடு கோரும்போது மாசு கட்டுப்பாடு சான்று இல்லையெனில் அவர்களுக்கு இழப்பீடு கிடைக்காது என தெரிவித்தனர்.

Related Stories: