கோவை மலுமிச்சம்பட்டியில் அ.தி.மு.க. பேனரால் விபத்து ஏற்படும் அபாயம்

கோவை, பிப். 19:  தமிழகத்தில் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சி, விழாக்கள் உள்ளிட்ட அனைத்து வகை பேனர்கள் வைக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பல இடங்களில் விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு சென்னை குரோம்பேட்டை பவானி நகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர்  இருசக்கர வாகனத்தில் வந்த போது சாலையின் நடுவில் இருந்த அ.தி.மு.க. பேனர்  விழுந்து விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரிய அளவிலான கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து விதிகளை மீறி பேனர் வைக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில்,கோவை அவினாசி சாலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகையொட்டி அ.தி.மு.க. கொடிக்கம்பம் சாலையில் வைக்கப்பட்டு இருந்தது. இதில், கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த கொடிக்கம்பம் சாலையில் விழுந்தது. இதன் காரணமாக அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜேஸ்வரி(22) என்ற இளம்பெண் விபத்தில் சிக்கினார். இதில், அவரின் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், அவரின் இடது கால் அகற்றப்பட்டது.

Advertising
Advertising

இந்நிலையில், கோவை மலுமிச்சம்பட்டி சாலையில் அரசு இசைக்கல்லூரிக்கு அருகே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 10 அடி உயர பிரமாண்ட அ.தி.மு.க. பேனர் கடந்த மாதம் வைக்கப்பட்டது. மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் அரசு இசை கல்லூரி முதல் மேட்டூர்  வரை தார் சாலை ரூ.2.66 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. மேலும், எஸ்.என்.எம்.வி. கல்லூரி ரோடு முதல் நரிகுறவர் காலனி வரை ரூ.1.10 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்கான பூமி பூஜையின்போது அமைச்சரை வரவேற்கும் வகையில் அ.தி.மு.க.வினர் பேனர் வைத்துள்ளனர். நிகழ்ச்சி முடிந்து பல நாட்கள் முடிந்த நிலையில் தற்போது வரை பேனரை எடுக்கவில்லை. இந்த பேனர் விழுந்து விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதே போன்ற பேனர் அதே பகுதியில் உள்ள ஜெ.ஜெ. நகர் பகுதியிலும் வைக்கப்பட்டுள்ளது. விதிமுறை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: