சுரங்கப்பாதையில் தேங்கிய கழிவுநீரை அகற்ற சமாதான கூட்டத்தில் முடிவு கோவில்பட்டி தமாகா போராட்டம் வாபஸ்

கோவில்பட்டி, பிப். 6: கோவில்பட்டி சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதையடுத்து, தமாகாவினர் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். கோவில்பட்டி நகரில் இளையரசனேந்தல் மெயின்ரோடு ரயில்வே சுரங்கப்பாதை வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள், மினிபஸ்கள், ஆட்டோ, வேன், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள அதிகளவில் செல்கின்றன. சுரங்கப்பாதையின் இருபுற தடுப்பு சுவர்கள் வழியாக, அருகில் தெருக்களின் வாறுகால் கழிவுநீர் கசிந்து, சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கின்றன. இதனால் சுரங்கப்பாதை கொசுக்களிடம் புகலிடமாக மாறியுள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் வாகனங்களில் செல்வோர் பெரிதும் அவதிப்படுகின்றனர். பல மாதமாக சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார கேடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றாததை கண்டித்து தேங்கிய கழிவுநீரில், நேற்று (5ம் தேதி) மாடுகளை குளிப்பாட்டும் போராட்டம் நடத்த இருப்பதாக தமாகாவினர் அறிவித்திருந்தனர்.

இப்போராட்டம் தொடர்பாக கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மணிகண்டன் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. நகராட்சி உதவி பொறியாளர் சரவணன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் விக்னேஷ், லோகராஜன், தமாகா நகர தலைவர் ராஜகோபால், வட்டார தலைவர் ஆழ்வார்சாமி, நகர செயலாளர்கள் செண்பகராஜ், மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன், பால்ராஜ், சுப்புராஜ், மதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இளையரசனேந்தல் சாலையில் உள்ள பாலத்தில் ஏற்பட்ட நீர்கசிவினை நீர்மட்டம் குறைவதன் அடிப்படையில் ஒரு வாரத்திற்குள் சரிசெய்யும் பணியினை நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆரம்பித்து 15 நாட்களுக்குள் முடித்திடவும், சுரங்கப்பாதையில் தேங்கும் நீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி அலுவலர்களுடன் கூட்டு தணிக்கை மேற்கொண்டு 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட தமாகாவினர், நேற்று நடத்த இருந்த மாடுகளை குளிப்பாட்டும் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

Related Stories: