அத்திமரப்பட்டி -பொட்டல்காடு இடையே குண்டும், குழியுமாக மணல் திட்டுகளாக மாறிய சாலையால் கிராம மக்கள் அவதி

ஸ்பிக்நகர், ஏப். 30: அத்திமரப்பட்டி -பொட்டல்காடு இடையே குண்டும், குழியுமாக பல்லாங்குழிபோல மாறிய சாலையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி அடுத்துள்ள அத்திமரப்பட்டி ஊரின் தெற்கு பகுதி வழியாக பொட்டல்காடு, குலையன்கரிசல், கூட்டாம்புளி, புதுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வதற்கு தார் சாலை உள்ளது. இதனை சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக அத்திமரப்பட்டி பொன்னகரம் முதல் பொட்டல்காடு வரையுள்ள தார் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி பல்லாங்குழிபோல காட்சியளிக்கிறது.

இதனை சீரமைப்பதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே இருந்த பழைய சாலை ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதனால் இப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பல தரப்பட்ட மக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த சாலையானது புதுக்கோட்டை, ஏரல் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் இணைப்பு சாலையாக உள்ளதால் தினந்தோறும் இந்த பகுதி வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த தார் சாலை இருந்த இடம் தெரியாமல் மணல் திட்டுகளாக மாறி உள்ளது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. எனவே கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படும் அத்திமரப்பட்டி- பொட்டல்காடு இடையேயான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அத்திமரப்பட்டி -பொட்டல்காடு இடையே குண்டும், குழியுமாக மணல் திட்டுகளாக மாறிய சாலையால் கிராம மக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: