உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் தைப்பூச திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்

திசையன்விளை, ஜன.30:  உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் தைப்பூச திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்கி பிப்.9ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற சிவ தலங்களில் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை அதிகாலை 4.30 மணிக்கு மங்களவாத்தியத்துடன் துவங்கி,   யதாஸ்தானத்தில் இருந்து சுவாமி சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகை அலங்கார மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.

தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், உதயமார்த்தாண்ட பூஜை நடக்கிறது. பின்னர் யானை மீது கொடிபட்டம் ஊர்வலத்துடன் மகர லக்கனத்தில் காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் கொடியேற்றமும், காலை 9 மணிக்கு விநாயகர் திருவீதி உலாவும், 11.30 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 6 மணிக்கு சிறப்பு சாயரட்சை அபிஷேகமும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு இந்திர விமான வாகனத்தில் சுவாமி சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகை வீதி உலா நடக்கிறது.

 2ம் திருவிழா முதல் 8ம் திருவிழா வரை தினமும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகளும், இரவு சமய சொற்பொழிவும் நடக்கிறது. 9ம் திருவிழாவான பிப்.8ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலையில் சிறப்பு அபிஷேகம், உதயமார்த்தாண்ட பூஜை நடக்கிறது.

பின்னர் சுவாமி சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகை தேருக்கு புறப்பாடு, காலை 7.30 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நடக்கிறது. நான்கு ரத வீதிகளிலும் சுற்றி தேர் நிலையம்  வந்ததும் தீர்த்தவாரி வைபவமும், மூலவர் சிறப்பு அபிஷேகம், உச்சிகால பூஜை, மாலை உற்சவர் சந்திரசேகரர் சிறப்பு அபிஷேகம், சாயரட்ச பூஜை, ராக்கால பூஜை, சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகை ரிஷபாரூடராக வீதிஉலா நடக்கிறது. 10ம் திருவிழாவில் காலை உதய மார்த்தாண்ட பூஜை, பஞ்சமூர்த்தி திருவீதி உலா, சிறப்பு அபிஷேகம்,  மதியம் உச்சிகால சிறப்பு பூஜை, இரவு சாயரட்சை பூஜை, ராக்கால பூஜையும், தொடர்ந்து இரவு 9 மணிக்கு திருக்கோயிலில் இருந்து சுவாமி சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகை தெப்பத்திற்கு எழுந்தருளல் மற்றும் தெப்ப உற்சவமும், சேர்க்கை தீபாராதனையும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார்.  விழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Related Stories: