தீயணைப்புத்துறை சார்பில் மாணவர்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி, ஜன.22: கிருஷ்ணகிரி நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்புத்துறை சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு பள்ளி நிறுவனர் ஆடிட்டர் கொங்கரசன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணித்துறை அலுவலர் வேலு, உதவி மாவட்ட அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் நிலைய அலுவலர்கள் மற்றும் கமாண்டோ வீரர்கள், செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர். பயிற்சியின் போது, கட்டிடம்  இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது, எண்ணெய் தீ விபத்தை அணைப்பது, மின்சார தீ விபத்துகளை அணைப்பது, பெருமழை, வெள்ளம் போன்ற காலங்களில் மக்களை பாதுகாப்பாக மீட்பது, உயரமான இடங்களிலிருந்து ஏணி மூலம் மீட்பது, விபத்தில் சிக்குபவர்களுக்கு முதலுதவி செய்வது, புயலின் போது சாலையில் விழும் மரங்களை இயந்திரங்கள மூலம் வெட்டி அகற்றுவது போன்றவை குறித்து செயல்விளக்கத்துடன் செய்து காண்பிக்கப்பட்டது. அத்துடன் இரவு நேரங்களில் மின்சாரம் தடைப்பட்ட இடங்களில் ஜெனரேட்டர் மூலம் இயங்கும் உயரமான பலூன் வடிவிலான கருவி மூலம் வெளிச்சம் வரவழைக்கப்பட்டு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்வது குறித்து விளக்கமளித்தனர். இதில் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் என ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

Related Stories: