மேச்சேரி அருகே தொழிலதிபரை கொன்று வீசிய கொலையாளிகள் கண்டுபிடிப்பு

மேட்டூர், ஜன.22: மேச்சேரி அருகே தொழிலதிபர் கொலை வழக்கில் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்ததாகவும் விரைவில் கைது செய்வதாகவும் போலீசார் தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம்(62). இவர், கடந்த 10 ஆண்டுக்கு முன்பு சேலம் கரும்பாலையில் செயல்பட்டு வரும் கிரஷர் இயந்திரங்களுக்கு, உதிரிபாகம் தயாரிக்கும் சிறுதொழிற்சாலை நடத்தி வந்தார். தொழிலில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதால், குடும்பத்தினர் பாலசுப்ரமணியத்தை விட்டு பிரிந்து சென்றுள்ளனர். இதனையடுத்து, அவர் சேலம் சூரமங்கலத்தில் உள்ள நண்பர் மைதீன் என்பவரது வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில், மைதீன் மகனுக்கு திருமணம் நடக்க உள்ளதால், பாலசுப்ரமணியம் ஜலகண்டாபுரம், செலவடை கிராமத்தில் உள்ள இளையராஜா என்ற ஜோதிடர் வீட்டில் தங்கி, உதவியாளராக பணிபுரிந்து வந்தார். அப்போது அங்கு ஜோதிடம் பார்க்க வந்த சாத்தப்பாடியைச் சேர்ந்த மணி என்பவருடன் பாலசுப்ரமணியத்திற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மணி மற்றும் இளையராஜா வீட்டில் மாறி மாறி தங்கி வந்துள்ளார். கடந்த 19ம் தேதி இரவு, இளையராஜா வீட்டில் இருந்து டூவீலரில் சென்ற பாலசுப்ரமணியம் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை காமனேரியில் இருந்து கோவிலூர் செல்லும் கொண்டமுத்தான் பெருமாள் கோயில் அருகே, பலத்த காயங்களுடன் பாலசுப்ரமணியம் சடலமாக கிடந்தார்.

அவ்வழியாக சந்தைக்கு காய்கறி கொண்டு சென்ற விவசாயிகள், இதை கண்டு விஏஓ கோவிந்தனுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, அவர் மேச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றிய பிரேதப் பரிசோதனைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக 7 பேரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஜோதிடர் இளையராஜா தொடங்கிய உள்ள டிரஸ்ட் ஒன்றில் பாலசுப்ரமணியம் மேனேஜராக நியமிக்கப்பட்டிருந்தார்.  இதில், பாலசுப்ரமணியம், இளையராஜாவை மீறி செயல்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால், இளையராஜாவுக்கும், அவருக்கும் மோதல் ஏற்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமா அல்லது ஜோதிடரிடம் சமுத்திரத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் குறி கேட்க வந்தபோது, பாலசுப்ரமணியம் பில்லி, சூனியம் ஏவி விட்டதால் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது என கருதி ஏழுமலை ஜோதிடருடன் சேர்ந்து கொலை செய்திருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், பாலசுப்ரமணியத்தை, திப்பம்பட்டி காவிரி கரையில், கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, சடலத்தை சம்பவ இடத்தில் வீசி சென்றுள்ளனர். விசாரணையை திசை திருப்பவே இப்படி செய்துள்ளனர். குற்றவாளிகளை நெருங்கி விட்டோம். கொலையாளிகளை விரைவில் கைது செய்வோம் என்றனர்.

Related Stories: