ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி பணம் பறித்த மேலும் 4 பேர் கைது

சேலம், ஜன. 22: ஓசூர் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி பணம் பறித்துவிட்டு தலைமறைவான, மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட கும்பல் தலைவனை போலீசார் ஓசூரில் தேடி வருகின்றனர்.  

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (35). ரியல் எஸ்டேட் அதிபர். நிலம் விற்பனை தொடர்பாக அட்வான்ஸ் வழங்குவதாக கூறிய ஒரு கும்பல், இவரை கடந்த 12ம் தேதி சேலம் வரவழைத்தது. நெய்க்காரப்பட்டியில் உள்ள ஒரு ஹோட்டல் அருகில் இருந்த சத்தியமூர்த்தியை, மர்ம கும்பல் ஒன்று காரில் கடத்திச் சென்றது. தொடர்ந்து, பஞ்சந்தாங்கி ஏரி பகுதியில் உள்ள கார் பட்டறையில் அடைத்துவைத்து தாக்கிய அக்கும்பல், சத்தியமூர்த்தியிடம் இருந்து ₹11 லட்சத்தை பறித்தது. இதுதொடர்பாக வெளியில் சொல்லகூடாது என எச்சரித்து, கடந்த 15ம் தேதி, சத்தியமூர்த்தியை அக்கும்பல் விடுவித்தது.

இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசில் சத்தியமூர்த்தி புகார் அளித்தார். இதனையடுத்து அவரை கடத்தி பணம் பறித்த ஜீவா (36), சுஜித்குமார் (20), கௌரிசங்கர் (33), கோபால் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை தீவிரமாக தேடிவந்தநிலையில், அவர்கள் பள்ளிபாளையத்தில் இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார், அந்த 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அவர்களிடம் இருந்து ₹11 லட்சம் பணம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர். இதனிடையே, கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ஓசூரைச் சேர்ந்த ஒருவர், இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் ஓசூர் விரைந்துள்ளது.

Related Stories: