கோவை மாவட்ட பேரூராட்சி பகுதி குட்டைகளில் மழை நீர் கட்டமைப்பு

கோவை, ஜன.21:  கோவை மாவட்டத்தில் 37 பேரூராட்சிகள் உள்ளன. 23 பேரூராட்சி பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டதாக தெரியவந்துள்ளது. அன்னூர், கோவில்பாளையம், இடிகரை, சூலூர், நீலம்பூர், செட்டிபாளையம், மலுமிச்சம்பட்டி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 50 அடிக்கும் கீழ் குறைந்து விட்டது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சில கிராமங்களில் மட்டும் மழையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் பாதுகாப்பான நிலையில் நீடிப்பதாக தெரியவந்துள்ளது. நிலத்தடி நீர்மட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க பேரூராட்சிக்கு சொந்தமான நீர் குட்டை, நீர்த்தேக்கம் உள்ள காலியிடம், நீர் சேகரிப்பில்லாத தடுப்பணை போன்றவற்றில் மழை நீர் கட்டமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எப்போதாவது மழை பெய்து நீர் பாய்ந்து வந்தால் அதை முழுமையாக நிலத்தடியில் சேர்த்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் சில பேரூராட்சிகளில் இந்த மழை நீர் கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது. படிப்படியாக இந்த ஆண்டு முழுவதும் அனைத்து பேரூராட்சிகளிலும் மழை நீர் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.

Advertising
Advertising

இது தொடர்பாக பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தினர் கூறுகையில், ‘‘எந்ெதந்த பகுதியில்  வறட்சி, நீர் பற்றாக்குறை இருக்கிறது என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மழை நீர் கட்டமைப்பு மூலமாக குடியிருப்புகள் உள்ள இடங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ேதவையான முயற்சி எடுக்கப்படும். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மழை நீர் கட்டமைப்பு உருவாக்க முன் வரவேண்டும். இப்படி செய்தால், போர்வெல் மூலமாக தண்ணீர் அதிகளவு பெறமுடியும். மழை நீரை நிலத்தடி நீர்மட்ட தொட்டிகளில் சேகரித்து பயன்படுத்தலாம். தண்ணீரை வீணாக்காமல் மண்ணில் சேமிப்பதன் மூலமாக நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படும். பேரூராட்சிகளில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்’’ என்றனர்.

Related Stories: