எருதாட்டம் கோலாகலம்

தர்மபுரி, ஜன.19:பொங்கல் விழாவை முன்னிட்டு, தர்மபுரி அருகே நூலஅள்ளி, சின்னநூலஅள்ளி, எம்.சவுளூர், உழவன்கொட்டாய், கொல்லகொட்டாய், பழனி கொட்டாய், முத்தரசன் கொட்டாய், பூசாரி கொட்டாய், பெருமாள் கொட்டாய், தண்டுக்காரன் கொட்டாய், அந்தேரி கொட்டாய், திருமலைக்கவுண்டன் கொட்டாய் உள்ளிட்ட 12 ஊர் பொதுமக்கள் சார்பில் எருதுவிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஒவ்வொரு ஊரிலும் இருந்து எருதுகள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்திய பின்னர், நூலஅள்ளிக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது.

பின்னர் நூலஅள்ளியில் அம்மன் கோயில் முன்பு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு எருதாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் எருதாட்டத்தில் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நடனம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் பச்சையம்மாள் ராஜா, ஊர் தலைவர் ராமநாதன், கவுன்சிலர் கோபால், கோவிந்தசாமி, சிவில் சப்ளை மணி, சொசைட்டி தலைவர் கோபி, நஞ்சன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி அதியமான்கோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

காரிமங்கலம்: காரிமங்கலம் ராமசாமி கோயில் சார்பில், பொங்கல் விழாவையொட்டி எருதுவிடும் விழா நேற்று நடந்தது. இதில் கெரகோடஅள்ளி,வெள்ளையன்கொட்டாவூர், கொல்லப்பட்டி ஏரியின் கீழூர், மோட்டுப்பெட்டி, காரிமங்கலம் மேல் மீதி உட்பட 12 கிராமங்களிலிருந்து எருதுகள் அலங்கரிக்கப்பட்டு, ராமசாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் எருது விடும் விழா நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்று தாங்கள் அழைத்து வந்த காளைகளை, தர்மபுரி - மொரப்பூர் ரோடு, கடைவீதி ஆகிய பகுதிகளில் எருது விட்டனர். இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். எருது விடும் விழாவில் அன்பு நகரை சேர்ந்த திம்மராயன்(27) உள்பட 5க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதே போல், கடத்தூர் அருகே வீர கவுண்டனூர் மாரியம்மன் கோயில் வளாகத்தில் எருதாட்ட நிகழ்ச்சி நேற்று நடந்தது.

Related Stories: