அனுமதி இல்லாமல் இயங்கிய பார்

தர்மபுரி, ஜன.19: தர்மபுரியில் அனுமதியின்றி இயங்கிய பாருக்கு, டாஸ்மாக் மேலாளர் பூட்டு போட்டார். தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலை ராமக்காள் ஏரி அருகே தனியார் தாபா ஓட்டல் உள்ளது. இந்த தாபா ஓட்டலில் குடிபோதையில் தகராறு நடப்பதாக, தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. இந்த தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட தாபாவிற்கு சென்றனர். அங்கு தகராறு செய்துக்கொண்டவர்களிடம் போலீசார் சமாதானப்படுத்தினர். அப்போது தாபா ஓட்டலில் 2 பார் இருந்துள்ளது. அதில் ஒன்று உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனால் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும், பார் நடத்தும் நபர்களுக்கும் இடையே கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் செய்யும் வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வளையதளங்களில் பரவியது.

இந்நிலையில் நேற்று தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பானுசுஜாதா, உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், தர்மபுரி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கேசவன் ஆகியோர், அந்த தனியார் தாபா ஓட்டலில் சோதனை நடத்தினர். பிரிட்ஜியில் இருந்த இறைச்சி மற்றும் தரமற்ற பால், தையிரை கைப்பற்றி அழித்தனர்.   இதைத்தொடர்ந்து அனுமதி இல்லாமல் இயங்கிய பார்க்கு பூட்டு போட்டு மூடினர். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் அனுமதி இல்லாமல் பார் நடத்திய, இதன் உரிமையாளர் ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். பார் நடத்திய பாரதி என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: