அதிமுகவினர் பணம் பட்டுவாடா; திமுக, கூட்டணி கட்சியினர் மறியல்

தேன்கனிக்கோட்டை, டிச.25: தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளி கிராமத்தில் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்த அதிமுகவினரை கண்டித்தும், அவர்களுக்கு துணை போகும் ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா தளி ஊராட்சி ஒன்றியம் அந்தேவனப்பள்ளி ஊராட்சி 21வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, திமுக சார்பில் மஞ்சுளாமூர்த்தியும், அதிமுக சார்பில் சிவகாமி மாதேஷ் என்பவரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அந்தேவனப்பள்ளி ஊராட்சி செயலாளராக பணிபுரியும் சீனிவாசன் தலைமையில், அதிமுகவினர் அந்தேவனப்பள்ளி கிராமத்தில் வீடு, வீடாக சென்று பணம் பட்டுவாடா செய்துள்ளனர். இதை திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து,  தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

 இதனை கண்டித்தும், ஊராட்சி செயலாளர் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் நேற்று காலை, அந்தேவனப்பள்ளி-அஞ்செட்டி சாலையில் அமர்ந்து, திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா, இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பணம் பட்டுவாடா செய்த ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதனை ஏற்று, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியலால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.அதிமுக சார்பில் போட்டியிடும் சிவகாமி மாதேசுக்கு ஆதரவாக அந்தேவனப்பள்ளியை சேர்ந்த அதிமுக பிரமுகர் பசுவராஜ்(48) தனது வீட்டில் பதுக்கி வைத்து பண பட்டுவாடா செய்து வருவதாக தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து, நேற்று காலை சேலம் வருமான வரித்துறை உதவி இயக்குநர் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் அவரது வீட்டில் சோதனை செய்தனர். சோதனையில், எதுவும் சிக்காததால் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

Related Stories: