தர்மபுரி, டிச.18: தர்மபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளில் போட்டியிட தாக்கல் செய்துள்ள 10,647 பேரின் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இதையடுத்து, அனைத்து பிடிஓ அலுவலகங்கள் முன்பும் ஏராளமானோர் திரண்ட நிலையில், நாளை(19ம் தேதி) இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27ம் தேதி மற்றும் 30ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடக்கிறது. இதையொட்டி, கடந்த 9ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கியது. 16ம் தேதி வேட்பு மனு தாக்கல் முடிந்தது. தர்மபுரி மாவட்டத்தில் 9ம் தேதி 107 பேரும், 10ம் தேதி 72 பேரும், 11ம் தேதி 416 பேரும், 12ம் தேதி 591 பேரும், 13ம் தேதி 2323 பேரும், 14ம் தேதி 1486 பேரும், 16ம் தேதி 5,649 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த 9ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரையிலும் 7 வேலை நாட்களில் மொத்தம் 10 ஆயிரத்து 647 பேர் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று காலை 10 மணிக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணி முதல் வேட்புமனு செய்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அலுவலங்கள் முன்பாக திரண்டனர். பின்னர் தங்களது வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதா என காத்திருந்து தெரிந்து கொண்டனர். மனுக்கள் பரிசீலனை இன்றும் நடைபெற உள்ளது.
