உழவன் செயலி மூலம் பயிர்களில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை

தர்மபுரி, டிச.12: உழவன் செயலி மூலம் விவசாயிகள் செல்போன் மூலமாகவே, பூச்சிநோய் தாக்குதலை பதிவேற்றம் செய்து, உரிய ஆலோசனைகளை பெறும் வசதி செய்யப்பட்டுள்ளதாக, தர்மபுரி வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விவசாயிகளுக்காக உழவன் செயலி, கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் வானிலை, உரம் இருப்பு, உரம் விலை, மானிய விபரங்கள், காப்பீடு விபரங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான விபரங்களையும் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், உழவன் செயலி மூலம், பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்குதலை பற்றி தங்கள் செல்போனில் பதிவேற்றம் செய்து, அதற்கான ஆலோசனை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தர்மபுரி மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர் (பொ) சிவசங்கர் சிங் கூறியதாவது:

வேளாண்மையில் புதுப்புது தொழில்நுட்பங்கள் நடைமுறையில்  இருந்தாலும், உழவன் செயலி மூலம் பயிர்களில் தோன்றும் பூச்சிகளின் தாக்குதல் மற்றும் நோய்களால் ஏற்படும் பாதிப்புக்கு, விவசாயிகள் உடனே தீர்வு காண, உழவன் செயலி ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. எனவே, விவசாயிகள் தங்களின் ஆன்ட்ராய்டு செல்போனில், பிளே ஸ்டோரில் உழவன் செயலி என்னும் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில் பண்ணை வழி காட்டி என்பதை தேர்வு செய்து, பாதிக்கப்பட்ட பயிரின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதன் மூலம், தங்கள் செல்போன் மூலமாகவே அதற்கான பரிந்துரைகளை பெற்று, பயன்பெற முடியும். எனவே, பயிர் சாகுபடியில் ஏற்படும் பூச்சி நோயை கண்காணித்து, உடனுக்குடன் தீர்வு காண, உழவன் செயலியை பயன்படுத்தி, விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாத்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: