மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் பலி

காவேரிப்பட்டணம், டிச.10: காவேரிப்பட்டணம் அருகே, மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் பலியானதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். காவேரிப்பட்டணம் அருகே ராயல்நகரை சேர்ந்த விவசாயி பெரியதம்பி.  நேற்று முன்தினம் மாலை, இவர் வளர்த்து வரும் 20க்கும் மேற்பட்ட ஆடுகளை, பட்டியில் அடைத்துள்ளார். இரவு 11 மணியளவில் ஆடுகளுக்கு தீவனம் வைத்துவிட்டு உறங்க சென்றுள்ளார். அப்போது, ஆடுகள் திடீரென கத்திய சத்தம் கேட்டு, வெளியே வந்து பார்த்த போது, பட்டியில் இருந்து ஒரு மர்ம விலங்கு தப்பி ஓடியது. ஆனால், அது என்ன விலங்கு என்பது இருட்டில் சரிவர தெரியவில்லை. இதனையடுத்து, பட்டிக்கு சென்று பார்த்த போது, 10 ஆடுகள் கழுத்தில் காயத்தோடு  இறந்து கிடந்தன. மேலும் 7 ஆடுகள் உயிருக்கு போராடி கொண்டிருந்தன. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெரியதம்பி கூச்சலிட்டார். இதனை கேட்டு அக்கம்பக்கத்தினர் பெரியதம்பி வீட்டின் முன்பு திரண்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவேரிப்பட்டணம் விஏஓ துரைராஜ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து இறந்த ஆடுகளை பார்வையிட்டனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, இறந்த ஆடுகளை பரிசோதனை செய்தார். மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் பலியான சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: