மாவட்டத்தில் பருவ மழையால் புளி விளைச்சல் அதிகரிப்பு

தர்மபுரி, டிச.4: தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை காரணமாக, புளி விளைச்சல் அதிகமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். தர்மபுரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் தனியார் நிலங்கள் உள்பட ஆயிரம் ஏக்கருக்கு மேல், புளிய மரம் வளர்க்கப்பட்டு வருகிறது. புளியம் பழத்தின் மேல் தோலை நீக்குதல், கொட்டையை நீக்குதல், சுத்தப்படுத்தி புளியம் பழத்தை தோசைப்புளி ஆக்குதல் போன்ற பணியில், குடும்ப பெண்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் நடப்பாண்டில்  தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகளவில் பெய்துள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழையும் பரவலாக பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் புளியமரங்களில் கடந்தாண்டை விட காய்பிடிப்பு அதிகமாகவே உள்ளது. கடந்தாண்டைவிட நடப்பாண்டில் புளி விளைச்சல் அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தொழில் வளம் இல்லாத தர்மபுரி மாவட்டத்தில், புளியின் மூலம் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் இருந்து ஆண்டுக்கு 50 ஆயிரம் டன் புளி பதப்படுத்தி விற்பனைக்கு வெளியிடங்களுக்கு அனுப்பப்படுகிறது. தர்மபுரி, மதிகோன்பாளையம், ராஜாபேட்டை, மாட்டுக்காரனூர், பாப்பாரப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, ராயக்கோட்டை, பொம்மிடி உள்ளிட்ட இடங்களில் புளியம்பழத்தின் மேல் தோலை நீக்குதல், புளியங்கொட்டையை நீக்குதல், சுத்தப்படுத்துதல், தோசைப்புளி ஆக்குதல் போன்றவைகள் குடிசை தொழிலாக செய்து வருகின்றனர். இந்நிலையில் நடப்பாண்டில் மழை பரவலாக பெய்து வருவதால், புளியமரத்தில் காய்பிடிப்பு அதிகமாக உள்ளது. இதனால் விளைச்சலும் அதிகரிக்கும் என்றனர்.

Related Stories: