பொதுமக்கள் வரத்து குறைவால் வெறிச்சோடிய உழவர் சந்தை

கரூர், நவ. 19: கரூர் வெங்கமேடு குளத்துப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையை தரம் உயர்த்தி, அதிகளவு பொதுமக்கள் வந்து செல்ல தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சி வெங்கமேடு குளத்துப்பாளையம் பகுதியில் கடந்த 2011ம் ஆண்டில் இருந்து உழவர்சந்தை வளாகம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. உழவர்சந்தை ஆரம்பித்த காலத்தில் ஏராளமான பொதுமக்களும், வியாபாரிகளும் வந்து சென்ற நிலையில் தற்போது அதிக ஆதரவு இன்றி வெறிச்சோடியே காணப்படும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது. 2000ம் ஆண்டில் ஆரம்பித்த கரூர் உழவர்சந்தை இன்றைக்கும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், வெங்கமேடு உழவர்சந்தையின் நிலைதான் குறிப்பிடும்படியாக இல்லை எனக் கூறப்படுகிறது. உழவர் சந்தை செயல்படும் பகுதிக்கு அருகிலேயே வாரச்சந்தை செயல்படுகிறது. பெரும்பாலான மக்கள் இந்த சந்தைக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கி சென்று விடுவதால் உழவர் சந்தைக்கு வருவதில் ஆர்வம் காட்டுவதில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும், அதிகளவு வியாபாரிகள் வந்து செல்லும் அளவுக்கு பஸ் வசதியும், பஸ் போக்குவரத்தும் இல்லாத பகுதி என்பதாலும் சந்தையின் செயல்பாடு நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உழவர்சந்தைக்கு வந்து சென்றாலும் விவசாயிகள் அதிகளவு வராத காரணத்தினால் சந்தையின் செயல்பாடு மந்தமாகவே உள்ளதாக கூறப்படுகிறது. உழவர்சந்தையை வெங்கமேடு நகரப்பகுதி அல்லது தாந்தோணிமலை பகுதியிலோ செயல்படும் வகையில் மாற்றம் செய்து தந்தால் இதன் வளர்ச்சியும் பெரிதளவு இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றாலும் மவுனம் சாதிப்பதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் தினமும் தரமான காய்கறிகளை வாங்கி பயன்படுத்துவதோடு, விவசாயிகளும், வியாபாரிகளும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த உழவர்சந்தை திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் குளத்துப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர்சந்தை இதுநாள் வரை பெரியளவில் பிரகாசிக்க முடியாத நிலையை நிலவி வருவதாக கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, வெங்கமேடு பகுதியில் உள்ள இந்த உழவர் சந்தைக்கு அதிகளவு விவசாயிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: