தர்மபுரி அரசு மருத்துவமனையில் ₹3.50 கோடியில் இருதய தீவிர சிகிச்சை மையம்

தர்மபுரி, நவ.12: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ₹3.50 கோடியில் இருதய தீவிர சிகிச்சை மையம் தொடங்கப்பட உள்ளது என, தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். தர்மபுரி தலைமை மருத்துவமனை கடந்த 2008ம் ஆண்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 900 உள்நோயாளிகளும் தினசரி சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்களுக்கு சிசிச்சை அளிக்க 120க்கும் மேற்பட்ட டாக்டர்களும், 250க்கும் மேற்பட்ட செவிலியர்களும் உள்ளனர். அவசர சிகிச்சை வார்டு, கண், பல், எலும்பு உள்பட 58 வார்டுகள் உள்ளன. இத்தனை வசதிகள் இருந்தும், இருதய சிகிச்சை பிரிவு வசதி தர்மபுரி அரசு மருத்துவமனையில் இல்லை.இதனால், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், சேலம் அல்லது பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் உயிரிழப்பு சம்பவமும் நடக்கிறது.

எனவே, தர்மபுரி அரசு மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவு தொடங்கி, சிறப்பு மருத்துவ நிபுணர் நியமிக்க வேண்டும் என, தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில்குமாரிடம் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தனை, தர்மபுரி எம்பி நேரில் சந்தித்து, தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர இருதய சிகிச்சை மற்றும் அவசர கால விபத்து சிகிச்சை மையங்கள் அமைக்க கோரிக்கை விடுத்தார். அதன் பயனாக, தேசிய சுகாதாரப் பணிகள் (என்எச்எம்) வாயிலாக, தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ₹3.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியில் இந்த மாதம் இறுதிக்குள், இருதய தீவிர சிகிச்சை மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எம்பி டாக்டர் செந்தில்குமார் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற உள்ளது. இருதய தீவிர சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு, மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். படிப்படியாக அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும். மேலும் அவசர கால விபத்து சிகிச்சைப்பிரிவு, தர்மபுரி மாவட்டங்களில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பென்னாகரம் மாவட்ட தலைமை மருத்துவமனை, அரூர் தாலுக்கா மருத்துவமனை ஆகிய 3 இடங்களில் தரம் உயர்த்தப்பட உள்ளது,’ என்றார்.

Related Stories: