உம்மியம்பட்டி அரசு பள்ளியில் மழலையர் வகுப்பு தொடக்கம்

தர்மபுரி, அக்.31: தொப்பூர் அருகே உம்மியம்பட்டி அரசு நடுநிலை பள்ளியில் மழலையர் வகுப்பு தொடக்க விழா நேற்று நடந்தது. இதில், 40 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். நல்லம்பள்ளி தொப்பூர் ஊராட்சி உம்மியம்பட்டியில், அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 235 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் நரசிம்மன் உள்ளிட்ட 9 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த பள்ளியில் புதியதாக மழலையர் வகுப்பு (எல்கேஜி, யூகேஜி) தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் அமுதா, ஊர்கவுண்டர்கள் மாதையன், ராஜூ, ஊர் நாய்க்கர் பன்னீர்செல்வம், பள்ளி வளர்ச்சி ஆலோசகர்கள் ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் அசோகன் மற்றும் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை ஆசிரியர் நரசிம்மன் வரவேற்றார். பள்ளியில் எல்கேஜி மற்றும் யூகேஜிக்கு தலா 20 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டனர். 15 ஆயிரம் செலவில் மழலையர் மாணவர்களுக்கு விளையாட்டு பொருட்கள் மற்றும் அமர்ந்து படிக்கும் தரை விரிப்பு, கட்டில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. ₹25 ஆயிரம் செலவில் 2 செட் வண்ண சீருடைகள் வழங்கப்படுகிறது. பள்ளியில் கற்றல் கற்பித்தல், மாணவ, மாணவிகள் ஒழுக்கம், ஆசிரியர்களின் புதுமையான செயல்பாடுகளை பார்த்து, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் ஆர்வத்துடன் சேர்த்துள்ளதாக தெரிவித்தனர்.

விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் எழிலரசி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: