கிராம மக்கள் கிடா வெட்டி வழிபாடு

தர்மபுரி அருகே இலக்கியம்பட்டி ஏரி, சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. மாவட்டத்தில் ஏற்பட்ட தொடர் வறட்சி காரணமாக, இலக்கியம்பட்டி ஏரிக்கு நீர் வரத்து இன்றி இருந்தது. கடந்த 2013ம் ஆண்டு பொதுமக்கள் சார்பில், ஏரி தூர்வாரப்பட்டது. 2014ம் ஆண்டு பெய்த கனமழைக்கு கூட ஏரி முழுவதும் நிரம்பவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, தர்மபுரி வட்டாரத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் விடிய விடிய பெய்த கனமழைக்கு, 14 ஆண்டுகளுக்கு பின்னர் இலக்கியம்பட்டி ஏரி மழை வெள்ளத்தால் முற்றிலும் நிரம்பி, தண்ணீர் வழிந்து வெளியேறியது. தகவல் அறிந்த இலக்கியம்பட்டி கிராம மக்கள் திரண்டு வந்து ஏரியை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் ஏரிக்கோடியில் பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி தலைமையில் ஊர் நிர்வாகி சுவாமிநாதன், காளியப்பன், தொழிலதிபர் பழனிசாமி, மணி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி, முன்னாள் வார்டு மெம்பர் ரவி, சங்கர் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பூஜை செய்து கிடாவெட்டி வழிபாடு நடத்தினர். நேற்று பெய்த மழையின் அளவு விபரம்: தர்மபுரி- 42 மில்லி மீட்டர், ஒகேனக்கல்- 25 மி.மீ, பென்னாகரம்- 6 மி.மீ, அரூர்- 5 மி.மீ, பாப்பிரெட்டிப்பட்டி- 4 மி.மீ, பாலக்கோடு- 2 மி.மீ.

Related Stories: