மூங்கில் மரங்கள் வெட்டி அகற்றம் தலைமை ஆசிரியரிடம் டிஇஓ நேரில் விசாரணை

காரிமங்கலம், அக்.10: காரிமங்கலம் அரசு பள்ளியில், மாணவர்களை வைத்து பச்சை மூங்கில் மரங்களை தலைமை ஆசிரியர் வெட்டிய சம்பவம் தொடர்பாக, மாவட்டக் கல்வி அதிகாரியும் விசாரணை செய்ததால், ஆசிரியர்கள் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்களிப்பில் வளர்க்கப்பட்ட பச்சை மூங்கில் மரங்களை, தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி தன்னிச்சையான முறையில், பள்ளி மாணவர்களை மூலம் வெட்ட வைத்துள்ளார். இதை கேட்க சென்ற பொதுமக்களையும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்த கலெக்டர் மலர்விழி உத்தரவிட்டார். அதன் பேரில், தாசில்தார் கலைசெல்வி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து நேற்று மாவட்டக் கல்வி அதிகாரி சண்முகவேல், பள்ளிக்கு நேரடியாக சென்று தலைமையாசிரியரிடம் விசாரணை மேற்கொண்டார். இது குறித்த அறிக்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது.

அனுமதியின்றி பச்சை மூங்கில் மரங்களை வெட்டியது தொடர்பாக, வருவாய்த்துறை அதிகாரிகளும், கல்வித் துறை அதிகாரிகளும் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருவது, காரிமங்கலம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: