கடத்தூர் அருகே செங்குட்டை ஏரியில் கருங்கற்கள் திருட்டு

கடத்தூர், அக்.4: கடத்தூர் அருகே செங்குட்டை ஏரியில் கருங்கற்கள் திருடி கடத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடத்தூர் அருகே கேத்துரெட்டிப்பட்டி பகுதியில், தமிழக அரசின் குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ், செங்குட்டை ஏரிக்கரையை பலப்படுத்தவும், ஏரி கோடி பகுதியை சீரமைக்கவும், ₹19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 10நாட்களாக ஏரியை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், ஏரிக்கரை பகுதியில் 60 ஆண்டு கால பழமையான கருங்கற்களை மர்ம நபர்கள் கடத்தி சென்றதாக மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கெளரமலை அடிவார பகுதிகளில், மழை நீர் அதிகமாக வரும் காலங்களில், ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும். நீர் வரத்து மோட்டாங்குறிச்சி, செளவரக்கொட்டாய், நத்தமேடு, மோட்டான்குறிச்சி, வேப்பிலைப்பட்டி, அண்ணாநகர் உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் ஒப்பந்ததாரர்கள் இரவோடு இரவாக, பொக்லைன் மூலம் கருங்கற்களை கடத்தி செல்கின்றனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ேவண்டும்,’ என்றனர். இது குறித்து மொரப்பூர் வட்டார உதவி பொறியாளர் தமிழ்மணி கூறுகையில், ‘கேத்துரெட்டிப்பட்டி ஏரிக்கரையை பலப்படுத்த ₹7 லட்சமும், ஏரி கோடியை பலப்படுத்த ₹11 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் கருங்கற்கள் திருட்டு நடந்திருந்தால், அதற்கான ரசீது அனுப்பி, அவர்களுக்கு அபராத தொகை வசூலிக்கப்படும்,’ என்றார்.

Related Stories: