பட்டா நிலம் வழியாக மழைநீர் கால்வாய் அமைக்க எதிர்ப்பு

தர்மபுரி, செப்.30: தர்மபுரி நகரில் மழைநீர் வடிவதற்காக அமைக்கப்படும் கால்வாய், பட்டா நிலம் வழியாக அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட ஏஎஸ்டிசி நகர், ஆவின் நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழைக்கு வெள்ளம் வீடுகளை சூழ்ந்தது. பென்னாகரம் மெயின்ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க்கின் உள்ளேயும் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள், தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். இந்நிலையில், பிடமனேரி ஏரி முழு கொள்ளளவை எட்டியதும், அங்கிருந்து வெளியேறிய மழைநீர் ஏஎஸ்டிசி நகர், நந்தி நகர் மற்றும் ஆவின் நகர் பகுதிகளில் உள்ள காலி வீட்டுமனைகளில் மீண்டும் தேங்கியது. இது தொடர்பாக  அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் செய்தனர். இதையடுத்து, பிடமனேரி ஏரியில் இருந்து வெளியேறும் நீரை வெளியேற்ற, தர்மபுரி  வருவாய் துறை ஊழியர்கள் பிடமனேரி, பெருமாள் கோயில் பகுதி, ஆவின் நகர், ஏஎஸ்டிசி நகர், சத்யா நகர் வரை கால்வாய் அமைக்க பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாய் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பெருமாள் கோயில் பகுதியில், பட்டா நிலத்திற்கு சொந்தமானவர்கள், தங்களது நிலத்தில் கால்வாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கால்வாய் தோண்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு, அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த தாசில்தார் சுகுமார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளை, பொதுமக்கள் முற்றுகையிட்டு, பட்டா நிலம் வழியாக கால்வாய் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தாசில்தார் சுகுமார் கூறுகையில், ‘ஏற்கனவே பதிவேட்டில் உள்ளபடி தான் கால்வாய் அமைக்கும் பணியை துவக்கியுள்ளோம். பட்டா நிலம் வழியாக அமைக்கவில்லை,’ என்றார். ஆனாலும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தின் போது ஆவின் நகர், ஏஎஸ்டி நகர், சத்யா நகர் வரை மழைநீர் தேங்கி நிற்பது வழக்கமாக உள்ளது. இந்தாண்டு அதிகமாக மழை பெய்ததோடு, பிடமனேரி ஏரி தண்ணீரும் நிரம்பி வழிவதால், பட்டா நிலங்களில் மழைநீர் பல நாட்களாக தேங்கி நிற்கிறது. இதற்காக பட்டா நிலங்கள் வழியாக கால்வாய் அமைக்க முயன்றதால் தடுத்து நிறுத்தினோம். இந்த பகுதியில் உள்ள பழைய பதிவேடுகளை சரிபார்த்து முறையாக சர்வே செய்ய வேண்டும். இங்கு வசிப்பவர்களுக்கு, எந்த பாதிப்பும் இன்றி கால்வாய் அமைக்க வேண்டும்,’ என்றனர். மழைநீர் வடிவதற்கான கால்வாய் பட்டா நிலம் வழியாக செல்வதற்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: