வேலை பளுவை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, செப்.19: வேலை பளுவை திணிப்பதை கண்டித்து, தர்மபுரியில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் மீது திணிக்கப்படும் பணிச்சுமைகள், நெருக்கடிகளை கைவிடக்கோரி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் முன் நடந்தது. மாவட்ட தலைவர் ருத்ரையன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் கோபிநாத், பொருளாளர் சர்வோத்தமன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமஜெயம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டதலைவர் சுருளிநாதன் வாழ்த்தி பேசினார்.

ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் திட்டமான பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தை ஊழியர்கள் செய்துவரும் நிலையில், அதிகாரிகள் ஊழியர்களை நெருக்கடி கொடுக்கக்கூடாது. ஜல்சக்தி அபியான் திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிதி ஒதுக்குவதோடு, திட்டத்தை செயல்படுத்த உரிய கால அவகாசம் வழங்கவேண்டும். தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்துக்கு போதிய ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். இத்திட்டத்தில் பணியாற்றும் கணினி உதவியாளர்கள் பணியிடங்களை நிரந்தரப்படுத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். கிராமசபா கூட்டங்களுக்கு உரிய அதிகாரத்தை வழங்கி தீர்மானங்களை தன்னிச்சையாக செயல்படுத்தும் அமைப்பாக மாற்றவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர், ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் காளிதாசன், கலெக்டர் மலர்விழியிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.

வாணியாற்றில் தடுப்பணை அமைக்க கோரிக்கை

அரூர், செப்.19: அரூர் நகரின் அருகில் வாணியாறு, வரட்டாறு கூடும் இடத்தில் கூட்டாறு உள்ளது. சித்தேரி மலைகளில் இருந்து வரும் வரட்டாறு, பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் வாணியாறும் கூட்டாற்றில் சேருகிறது. கூட்டாறு பகுதிகளில் விவசாய நிலங்கள், திறறந்த வெளிக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. அதேபோல், அரூர் நகரில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த கூட்டாறு உள்ளது. இந்த கூட்டாறு பகுதியில் தடுப்பணை அமைந்தால், சுற்றுவட்டார பகுதி விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், குடிநீர் பிரச்னையும் தீரும். எனவே, அரூர் நகர் அருகிலுள்ள வாணியாறு மற்றும் வரட்டாறு கூடும் இடத்தில் தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: