சளி, காய்ச்சலை கட்டுப்படுத்த நோயாளிகளுக்கு நிலவேம்பு குடிநீர்

தர்மபுரி, செப்.19: சீதோஷ்ணநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள சளி, காய்ச்சலை கட்டுப்படுத்த தர்மபுரி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் தற்போது சீதோஷ்ணநிலை மாறியுள்ளது. காலையில் வெயில், மாலையில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த பருவநிலை மாற்றத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் சளி, காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தர்மபுரி அரசு மருத்துவமனை காய்ச்சல் பிரிவுக்கு தினசரி 150 பேர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.  உள்நோயாளிகளாக சிலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சளி மற்றும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில், தர்மபுரி அரசு மருத்துவமனையின் சித்தா பிரிவின் சார்பில் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களுக்கு  நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது.

 இதை அவர்கள் ஆர்வமாக வாங்கி குடித்து செல்கின்றனர். இதுபோல் மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி, பாளையம்புதூர், தொப்பூர், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்தவமனைகளிலும், சித்தா பிரிவு சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தர்மபுரி அரசு மருத்துவமனை சித்தா பிரிவு ஊழியர்கள் கூறுகையில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த 2008ம் ஆண்டு முதல் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சிறுவர்களுக்கு 30 மில்லி கிராம், பெரியவர்களுக்கு 60 மில்லி கிராம் என்ற அளவில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட காய்ச்சல் வராமல் தடுக்கவே, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது என்றனர்.

Related Stories: