தர்மபுரி அரசு மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவுக்கு விரைவில் உதவி பேராசிரியர்

தர்மபுரி, செப்.15: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இருதய சிகிச்சை பிரிவுக்கு விரைவில் உதவி பேராசிரியர் நியமிக்க உள்ளதாக, டாக்டர் செந்தில்குமார் எம்பி தெரிவித்தார்.தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில்குமார், நேற்று தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது, அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, தீவிர நுரையீரல் சிகிச்சை, இருதய சிகிச்சை பிரிவு, ரத்தம் சுத்திகரிப்பு பிரிவு மற்றும் ஆண்கள், பெண்கள் சிகிச்சை பிரிவுகளை ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தர்மபுரி அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்திய பிறகு, வெளிமாவட்டங்களில் இருந்து நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

ஆரம்பத்தில் 400 ஆக இருந்த படுக்கைகளை 900 ஆக உயர்த்தி, தற்போது 1,030 படுக்கையாக மாற்றியுள்ளோம். ₹10 கோடி நிதியில், மகப்பேறு பிரிவுக்கு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இருதய நோய் சிகிச்சை பிரிவு, நரம்பியல் சிகிச்சை பிரிவு, சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு தொடங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக இருதய நோய் சிகிச்சை பிரிவுக்கு உதவி பேராசிரியர் நியமிக்கப்பட உள்ளார். படிப்படியாக நரம்பியல், சிறுநீரக பிரிவுக்கும் உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த துறைகளுக்கு பேராசிரியர்கள் நியமித்த பின்னர், தரம் வாய்ந்த மருத்துவமனையாக மாறும்.  ஓரிரு ஆண்டுகளில், தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயரும். தர்மபுரி நகராட்சி, தமிழகத்தில் சிறந்த நகராட்சியாக தேர்வு செய்து விருது வழங்கப்பட்டுள்ளது. நகராட்சிக்குள் இருக்கும் கழிப்பறைகளை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். மேலும், விமான நிலையங்களில் உள்ளது போல் இ-டாய்ெலட் வசதி போன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 தர்மபுரி அருகே ராணுவ ஆராய்ச்சி மையம் தொடங்குவதற்கான நிலத்தை, மத்திய பாதுகாப்பு துறை  கையகப்படுத்தி விட்டது. இனிமேல், மேற்கொண்டு பாதுகாப்பு துறை தான் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளையும், அமைச்சரையும் வலியுறுத்துவேன். மொரப்பூர்- தர்மபுரி ரயில் இணைப்பு பாதை திட்டத்தை, வரும் 5 ஆண்டுகளுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். தர்மபுரி தொகுதியில் தற்போது 2 எம்பிக்கள் உள்ளதால், இந்த திட்டப்பணியை சேர்ந்தே விரைவுபடுத்தி முடிப்போம். இவ்வாறு செந்தில்குமார் எம்பி கூறினார்.

Related Stories: