பேனர்களை அகற்றுவதில் பிரச்னை மாநகராட்சி அதிகாரிகள் போலீசார் வாக்குவாதம்

கோவை, செப்.15:கோவையில் பிளக்ஸ் பேனர்களை அகற்றுவதில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  கோவையில் பிளக்ஸ் பேனர்களை அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காந்திபுரத்தில் மாநகராட்சி மத்திய மண்டல சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையிலான அதிகாரிகள் நஞ்சப்பா சாலையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகளை அகற்றி வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காட்டூர் காவல்நிலைய போலீசார் அங்கு சென்றனர்.

மேலும், விளம்பர போர்டுகளை வைத்தவர்கள் கண்காணிப்பு கேமராக்களை இலவசமாக பொருத்திக் கொடுத்துள்ளனர் என்றும், கேமராக்கள் பொருத்தப்பட்ட கம்பிகளில் சிறிய அளவிலேயே விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர். மேலும், அந்த விளம்பர போர்டுகள் ஒதுக்குப்புறமாக இருப்பதால் பொதுமக்களுக்கு இடையூறாக இல்லை என்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறினர். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் போர்டுகளை அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர். பின்னர், அகற்றிய விளம்பர போர்டுகளை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அகற்றப்பட்டாமல் உள்ள மற்ற விளம்பர போர்டுகளை உடனடியாக அகற்றுவதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: