சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

காரிமங்கலம்,செப்.11: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ராமசாமி கோயிலில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை நூற்றுக்கணக்கான கடைகள் சாலையின் இருபுறமும் உள்ளது. இதேபோல் பாலக்கோடு ரோடு, மொரப்பூர் ரோடு ஆகியவற்றிலும் வணிக நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளது. மேலும் இப்பகுதியில் அரசு அலுவலகங்கள், வங்கிகள் செயல்பட்டு வருகிறது.காரிமங்கலம் நகருக்குள் செல்லும் அனைத்து சாலைகளும் மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சாலைகளில் அமைந்துள்ள வணிக நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்து வருவது தொடர்கதையாகி விட்டது. நிறுவனங்களுக்கு வரும் சரக்குகள் நடுரோட்டில் இறக்கி வைக்கப்படுகிறது.  இதேபோல் இந்த வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்தி விடுவதாலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகளவு ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றது.  இதேபோல் மொரப்பூர் ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தும் ஸ்டாண்டு போல ஆகிவிட்டது. வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் அன்றாட நிகழ்ச்சியாக மாறிவிட்ட நிலையில் மாநில நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories: