மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பிக்க அழைப்பு

தர்மபுரி, செப்.11: மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக, செவித்திறன் குறைபாடு, 75 சதவீதத்திற்கு மேல் நுண் அறிவுத்திறன் குன்றியோரின் தாய்மார்கள், 18 வயது முதல் 45 வயது வரையுள்ள  மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 45 வயதிற்கு உட்பட்ட நபர்கள் தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, தையல் பயிற்சி முடித்ததற்கான சான்றுகளுடன் வரும் 20ம்தேதி அன்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி: தசைச்சிதைவு நோய் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிப்பால் இரண்டு கைகள் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகள், பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு ₹74 ஆயிரத்து 900 மதிப்புள்ள பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கப்படவுள்ளது. எனவே, முதுகு தண்டுவடம் மற்றும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், உரிய சான்றுகளுடன் வரும் 20ம்தேதி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: