இருகூர்- தேவனகுந்தி வழியாக பெட்ரோலிய குழாய் பதிப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மனு

தர்மபுரி, ஆக.14: கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒடையாண்ட அள்ளி, எச்சனஅள்ளி, எதிர்கோட்டை, ராயக்கோட்டை, பழையூர், நெல்லூர், சஜ்ஜலப்பட்டி, பிள்ளாரி அக்ரகாரம், கொப்பகரை, கோனேரி அக்ரகாரம், லிங்கனம்பட்டி, நடுக்காலம்பட்டி, கடவரஅள்ளி, பண்டப்பட்டி, பந்தாரப்பட்டி, சின்னபண்டப்பட்டி, அயர்னப்பள்ளி, ஆழமரத்துக்கொட்டாய், கொடகாரலஅள்ளி, சீபம், துப்புகானம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் நேற்று தர்மபுரி ஒட்டப்பட்டிக்கு வந்தனர்.

அங்குள்ள பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனத்தின் இருகூர்- தேவனகுந்தி குழாய் பதிப்பு திட்ட சப் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர். பின்னர் சப் கலெக்டர் பாசியத்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: இருகூர்-தேவனகுந்தி  குழாய் பதிப்பு திட்டம் கோவையில் தொடங்கி, கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை வேளாண் நிலங்கள் வழியாக, குழாய் பதிக்க பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்காக உழவர்களின் நில உபயோக உரிமையை கையப்படுத்த, சம்பந்தப்பட்ட உழவர்களுக்கு கெடு விதித்து, பாரத் பெட்ரோலியம் கார்பரேசன் நிறுவனம் சார்பில், அறிக்கை (நோட்டீஸ்) அனுப்பப்பட்டுள்ளது.

இந்த செயல் உழவர்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரத்தையும், அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை அழித்து விடும். ஆகவே, கிருஷ்ணகிரி மாவட்ட உழவர்கள், தங்களது நிலத்தை தர முடியாது. சாலையின் வழியாக குழாய் பதித்துக்கொள்ளுங்கள். நாங்கள் எதிர்க்கவில்லை.  கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை என்றால், வரும் 19ம் தேதி கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன், தமிழக உழவர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: