என்எஸ் ரெட்டியூர் அருகே சொந்த ெசலவில் ஏரியை தூர்வாரிய அரசு அலுவலர்கள்

தர்மபுரி, ஜூலை 23: தர்மபுரி ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் சொந்த செலவில், என்எஸ் ரெட்டியூர் அருகே நடந்த ஏரியை தூர்வாரும் பணியை அப்பகுதி மக்கள் பாராட்டினர். தர்மபுரி ஊராட்சி ஒன்றியம் நல்லசேனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஆவல்நாய்க்கன்பட்டியில், சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் கருவேல மரங்கள் வளர்ந்து காணப்பட்டது. இந்த ஏரியை தர்மபுரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்பு நிதி ₹2 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது. இப்பணியை பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், மாதையன் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து ஜல்சக்தி அபியான் திட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டமும், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்ச்சியில் மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது. இந்த ஏரியை தூர்வாரி பராமரிப்பதன் மூலம், 16 ஹெக்டர் விவசாய நிலத்திற்கு பாசன வசதி கிடைக்கும். இதில் 20 பாசன கிணறுகள், 10 கை பம்புகள், 10 மினிபவர் பம்புகள், 3 தனியார் விவசாய கிணறுகள் மற்றும் ஊராட்சி ஆழ்துளை கிணறு ஆகியவற்றுக்கு தண்ணீர் கிடைக்கும். ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்களை, அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பாராட்டினர். இப்பணியில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், முத்தையன், ரேவதி, கந்தப்பன், மனோகரன், அனைத்து ஊராட்சி செயலாளர்கள், ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள், ெபாதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: