தர்மபுரியில் வரும் 26ம் தேதி புத்தக திருவிழா துவக்கம்

தர்மபுரி, ஜூலை 18: தர்மபுரியில் 2ம் ஆண்டு புத்தக திருவிழா, வரும் 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4ம் தேதி வரை, 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. தர்மபுரி புத்தகத் திருவிழா வரவேற்பு குழுத்தலைவர் டிஎன்சி மணிவண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தகடூர் புத்தக பேரவை சார்பில், தர்மபுரியில் 2ம் ஆண்டு புத்தகத் திருவிழா வரும் 26ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 4ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை அரங்குகள் திறந்திருக்கும். கலெக்டர் மலர்விழி தலைமையில், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து விழா மலரை வெளியிடுகிறார்.

ஒவ்வொரு நாளும், பிற்பகல் 4 மணியிலிருந்து மாலை 6 மணி வரை நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள், இலக்கியக் கலந்தாய்வுக் கூட்டங்கள், கருத்தரங்குகள், மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

வரும் 26ம் தேதி காகிதப் புரட்சி என்ற தலைப்பில் ஸ்டாலின் குணசேகரன் பேசுகிறார். 27ம் தேதி வழக்கறிஞர் அருள்மொழி, 28ம் தேதி உதயச்சந்திரன், 29ம் தேதி மதுக்கூர் ராமலிங்கம், 30ம் தேதி பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசுகின்றனர்.

மேலும், மாணவர்களிடையே நூல்கள் வாசிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்க, சிறுத்தொகையை சேமித்து புத்தகங்கள் வாங்கும் வகையில், புத்தக திருவிழாவுக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு தள்ளுபடி விலையில் உண்டியல் வழங்கப்படும். அதேபோல, ₹2ஆயிரத்திற்கும் அதிகமாக நூல்களை வாங்குவோருக்கு, நூல் ஆர்வலர் சான்று வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் சிசுபாலன், செந்தில், ராஜசேகரன், கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: