ஸ்டாப்பில் நிறுத்தாமல் பஸ்சை வேறு பகுதியில் நிறுத்தினால் அபராதம்

காரமடை, ஜூலை 12:கோவை மாவட்டம் காரமடை, மேட்டுப்பாளையம் சாலையில் பஸ் பயணிகளுக்கும், பஸ் டிரைவர்களுக்கும் அபராதம் விதிக்கும் புதிய நடைமுறை அறிமுகமாகியுள்ளது. கோவை மாவட்டம், காரமடையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல சுற்றுவட்டார கிராம மக்கள், பஸ் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், மேட்டுப்பாளையம் சாலையில், பழைய ஜெயலட்சுமி தியேட்டர் முபு பயணிகள் வசதிக்காக கட்டப்பட்ட நிழற்குடை பயன்படாமல் இருந்தது. பஸ் டிரைவர்கள், பஸ்சை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி வந்தனர். இதனால் மேட்டுப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண, காரமடை போலீசார் டிரைவர்களிடம் பஸ்களை பஸ் நிறுத்தத்தில் நிறுத்தம் செய்ய அறிவுறுத்தினர். பயணிகள் பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ்சில் பயணிக்க வேண்டும். அதை தவிர்த்து, வேறு இடத்தில் நின்று பஸ்சை நிறுத்தி அதில் ஏறி பயணித்தால், அந்த பயணிக்கு ரூ.100 அபராதமும், பஸ் டிரைவர்கள் பஸ்சை ஸ்டாப்பில் நிறுத்தாமல் வேறு பகுதியில் நிறுத்தினால் அதற்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்படும் என்று காரமடை போலீசார் அறிவுறுத்தினர். இதற்கான அறிவிப்பை பேனராகவும் வைத்துள்ளனர். இது குறித்து காரமடை போலீஸ் எஸ்ஐ., ஜான்சன் கூறுகையில், ‘‘அரசு போக்குவரத்து கழக கோவை கோட்ட இயக்குனரிடம் போலீஸ் துறை சார்பில், போக்குவரத்துக்கு இடையூறாக அரசு பஸ்கள் நிற்காமல் பஸ் நிறுத்தத்தில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டது. மீறி செயல்படும் டிரைவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: