காரிமங்கலம் வார சந்தையில் சூதாட்டம் நடத்தியவர்களை போலீசில் ஒப்படைத்த மக்கள்

காரிமங்கலம், ஜூன் 19: காரிமங்கலம் வாரச்சந்தையில் சூதாட்டம் நடத்திய கும்பலை சேர்ந்த ஒருவரை பொதுமக்கள் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அந்நபரை திருப்பி அனுப்பி வைத்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் ரங்கர் ஆட்டம் எனப்படும் டப்பா சூதாட்டம் பிரசித்தி பெற்றது. கோயில் நிகழ்ச்சிகள், தனியார் கிளப்புகள் என பல வற்றிலும் இந்த சூதாட்டம் போலீசார் ஆசியுடன் நடந்து வருகிறது. சூதாட்டம் நடத்துவது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சூதாட்டத்தால் பொதுமக்கள் ஏழை எளிய மக்கள் தங்களது பணத்தை இழந்து வருவது தொடர்கதையாகி விட்ட நிலையில் சூதாட்டத்தை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும் காரிமங்கலம் வாரச்சந்தையில் ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள், விவசாயிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதை பயன்படுத்திக் கொண்டு ரங்கர் ஆட்டத்தை அதிகாலை 5 மணி முதல் ஒரு கும்பல் சூதாட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது.

இதில் பலரும் பணத்தை பறிகொடுத்த நிலையில் காலை 8 மணி அளவில் தகவலறிந்த ஊர் நாட்டு கவுண்டர் செந்தில்குமார் மற்றும் அண்ணா போக்குவரத்து பிரிவு மண்டலத்தலைவர் சிவம் ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் 6பேர் கொண்ட அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த கும்பலில் இருந்த ஒருவர் மட்டும், மாட்டிக் கொண்ட நிலையில் அவரை பிடித்து அவரிடமிருந்த ரொக்கம் ₹10ஆயிரத்தை பறிமுதல் செய்து, போலீசாரிடம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்த அன்வர்பாஷா(50), என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்கள் எதிர்பார்த்த நிலையில், போலீசார் அவரை ராஜமரியாதையுடன் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சூதாட்டம் நடத்துவதற்கு உறுதுணையாக இருக்கும் போலீசார், சூதாட்டக்கும்பலை பிடிக்க மாட்டார்கள், பொதுமக்கள் பிடித்து கொடுத்தாலும் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களை அனுப்பி விடுகின்றனர். நேற்று நடந்த சம்பவத்தில் பொதுமக்கள் பிடித்துக் கொடுத்தவரிடம் ₹10 ஆயிரத்தை வசூலித்து கொண்டு அவரை அனுப்பி விட்டனர். மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட போலீசார் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், போலீசாரை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் இறங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றனர்.

Related Stories: