அங்கன்வாடிகளில் செயல்படும் அரசு மழலையர் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி

தர்மபுரி, ஜூன் 18: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிகளில் செயல்படும், அரசு மழலையர் வகுப்பு ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான 3 நாள் பயிற்சி நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் 72 அங்கன்வாடி மையங்களில் செயல்படும் மழலையர் (எல்.கே.ஜி, யு.கே.ஜி) வகுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள 72 ஆசிரியர்களுக்கு, மாவட்ட அளவிலான 3 நாள் பயிற்சி, தர்மபுரி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக பயிற்சி கூடத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமசாமி, உதவித்திட்ட அலுவலர் வெங்கடேசன், உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேலு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில், ஆசிரியர்களுக்கு கற்பித்தலை மாண்டிசோரி முறையில் நடத்துவது, மொழி வளர்ச்சிக்கு தேவையான பாடல்கள், கதைகள் போன்ற செயல்பாடுகளுடன் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய மொழி உச்சரிப்பு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு உளவியல், முன்பருவ பாடத்திட்டங்கள், அதை அணுகும் முறைகள், செயல்படுத்தும் முறைகள் குறித்தும் விரிவான பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குமுதா, சுகந்தி செய்திருந்தனர். இதில், முதன்மை கருத்தாளர்களாக தனலட்சுமி, வினோதி, பார்கவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: