ஆர்டிஓ அதிரடி குடிநீர் கேட்டு பரபரப்பு தோகைமலை ஒன்றிய அலுவலகத்தில் 2 கிராமத்தினர் முற்றுகை போராட்டம்

தோகைமலை, ஜூன் 18: தெற்குபள்ளம் மற்றும் தெற்கு வேதாசலபுரம் கிராம மக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் தோகைமலை ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம் தெற்குபள்ளம் மற்றும் தெற்கு வேதாசாலபுரம் பகுதிகளில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் தெற்குபள்ளம் பகுதி மக்களுக்கு போர்வெல்கள் அமைத்து 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் மூலம் தோகைமலை ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கி வந்துள்ளது. இந்நிலையில் வறட்சி காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பே போர்வெல் தூர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு குளித்தலை மணப்பாறை மெயின் ரோட்டில் செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உள்ள ஏர்வால்வில் கசியும் தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வந்துள்ளனர்.இந்நிலையில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் கசியும் தண்ணீரும் நின்று விட்டதால் கடந்த 2 மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு அருகில் உள்ள விவசாய கிணறுகளில் குடிநீர் எடுத்து வந்துள்ளனர். ஆனால் தற்போது கடுமையான வறட்சியின் காரனமாக விவசாய கிணற்றிலும் போதுமான தண்ணீர் இல்லாததால் தண்ணீர் எடுக்க அனுமதிக்கவில்லை என்றும் வேதனை அடைந்துள்ளனர்.

இதேபோல் தோகைமலை தெற்கு வேதாசலபுரத்திலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் போதுமான குடிநீர் கிடைக்காமல் பள்ளிகள், கல்லூரிகள் உள்பட பல்வேறு பணிகளுக்கு குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் தெற்குபள்ளம் மற்றும் தெற்கு வேதாசலபுரம் பகுதி பொதுமக்கள் தவித்து வந்ததுடன், கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லாமல் அவதிக்குள்ளாகி வந்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த தெற்குபள்ளம் மற்றும் தெற்கு வேதாசலபுரம் பொதுமக்கள் நிரந்தரமாக காவிரி குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று கேட்டு காலிக்குடங்களுடன் ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன், மேலாளர்கள் திருஞானம், ருக்குமணி, ஊராட்சி செயலாளர் இளங்கோவன் ஆகியோர் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புதிய போர்வெல் அமைத்து 2 நாட்களில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். நேற்று காலை 10 மணி முதல் 11 மணி வரை நடந்த முற்றுகை போராட்டத்தால் தோகைமலை ஒன்றிய அலுவலகத்தில்பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: