தர்மபுரியில் காற்றில் பறக்கும் விதிமுறை ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

தர்மபுரி, ஜூன் 12: நாடு முழுவதும் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எளிதான மற்றும் குறைவான கடன் தவணை காரணமாக, வாகனங்களை வாங்குவோர் அதிகரித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் 700 அரசு மற்றும் தனியார் பஸ்கள், 54 மினி பஸ்கள், 3500 லாரிகள், 2,150 ஆட்டோக்கள், 50 ஷேர் ஆட்டோக்கள் என மொத்தம் 14 ஆயிரத்து 692 போக்குவரத்து வாகனங்களும், கார்கள், இரு சக்கர வாகனங்கள் என 5 லட்சம் வாகனங்களும் உள்ளன. இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மாவட்டத்தில் இயங்கி வருகிறது. உச்சநீதிமன்றம் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்களும், பின்னால் அமர்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிட்டு, பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆனாலும் தர்மபுரி மாவட்டத்தில் நடைமுறைக்கு சாத்தியமில்லாமலேயே இருந்து வருகிறது. கடந்த 1ம் தேதி முதல் அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும், ஹெல்மெட் அணிய வேண்டும் என தர்மபுரி டிஎஸ்பி ராஜ்குமார் அறிவுறுத்தியிருந்தார்.  இதையொட்டி கடந்த 3ம் தேதி, தர்மபுரி நகரில் இருசக்கர வாகன ஓட்டிகளில் ஹெல்மெட் அணியாதவர்களை பிடித்த போலீசார் ஹெல்மெட் அணிவோம் என உறுதி மொழி எழுதி வாங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஆனாலும் தர்மபுரி நகரில் 100க்கு 95 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிவதை தவிர்க்கின்றனர். எனவே, தர்மபுரி போலீசார் அவ்வபோது வாகன தணிக்கை செய்து, ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: