அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

தர்மபுரி, ஜூன் 11: தர்மபுரி மாவட்டம் மேல் ஈசல்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று வீட்டு மனை பட்டா வழங்க கோரி, கலெக்டர் மலர்விழியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகாவிற்குட்பட்ட ஈசல்பட்டி அருந்ததியர் குடியிருப்பில் 22 குடும்பத்தினருக்கு, கடந்த 1989ம் ஆண்டு தொகுப்பு வீடு கட்டி தரப்பட்டது. இங்குள்ள ஒவ்வொரு வீடுகளிலும் தற்போது 3 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். இதனால் பல்வேறு சிரமங்களுக்குட்பட்டு வசிக்கிறோம். எனவே வீடு மனை இல்லாத எங்களுக்கு, எங்கள் பகுதி அருகிலேயே இலவச வீட்டு மனை பட்டா வழங்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்ட தனியார் பள்ளி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், கலெக்டர் மலர்விழியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் 2019 மே, 31க்கு பின் அங்கீகாரம் இன்றியும், 25 சதவீத இலவச கட்டாய கல்வி மாணவர் சேர்க்கை இல்லாமால் பல்வேறு தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதனால், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசின் ஆணைப்படி அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில், மாணவர்களின் சேர்க்கையை தடுத்து நிறுத்த வேண்டும். இப்பள்ளிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் பணிபுரிந்து கொண்டு சில பள்ளிகளில் அரசு ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் பெயர்களில் பங்குதாரர்களாக செயல்பட்டு வருகின்றனர். இப்பள்ளிகளில் பொதுதேர்வின் போது கூடுதல் மார்க் பெற, தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தடுக்க, தனியார் பள்ளிகளில் தங்களது பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் நடத்தி வரும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: