பிளஸ்1 சேர்க்கை தொடக்கம் அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியல் பிரிவுக்கு கடும்போட்டி

தர்மபுரி, ஜூன் 4: தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 11ம் வகுப்பிற்கு சேர்க்கை நேற்று தொடங்கியது. கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியல் பாடப்பிரிவுக்கு மாணவர்களிடையே கடும்போட்டி ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 322 பள்ளிகளை சேர்ந்த 21 ஆயிரத்து 626 மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். இதில் 20,760பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளி மாணவர்கள் 94.53 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ்1 வகுப்புக்கான சேர்க்கை நேற்று தொடங்கியது.

அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கடந்த ஆண்டு 598 பேர்  பிளஸ்1 படித்தனர். நேற்று 351 பேர், விண்ணப்பம் வழங்கி சேர்ந்துள்ளனர். 6ம் வகுப்பு முதல் 10ம் வரை 220 பேர் சேர்ந்துள்ளனர். நேற்று ஒரே நாளில், 571 மாணவிகள் பள்ளியில் சேர்ந்துள்ளதாக, தலைமை ஆசிரியர் தெரசாள் தெரிவித்தார்.

தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சோலைக்கொட்டாய், அதியமான்கோட்டை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி, காரிமங்கலம், பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்1 சேர்க்கை நடந்தது. 6ம் வகுப்பு முதல் 10 வரை மாணவர் சேர்க்கையும் நடந்தது. கடந்த ஆண்டு வரை, தர்மபுரி மாவட்டத்தில் முதல் குரூப் பாடமான கணிதம், உயிரியல் பாடப்பிரிவு தேர்வு செய்தனர்.

நடப்பாண்டு அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியல் பாடப்பிரிவு தேர்வு செய்வதில் மாணவர்களிடையே கடும்போட்டி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தர்மபுரி அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், ‘தற்போது நீட் தேர்வு காரணமாக, முதல் குரூப் பாடப்பிரிவுகளை தேர்வு செய்வது குறைந்துள்ளது. அதற்கு பதிலாக கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியல் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகள் தேர்வு செய்கின்றனர்.

வேலைவாய்ப்பு உடனே கிடைப்பதால் வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு தேர்வு செய்வதில் மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்,’ என்றனர்.

Related Stories: