தேர்தல் அதிகாரிக்கே தெரியாமல் சூலூரில் இருக்கும் வாக்கு இயந்திரங்கள்

சூலூர், மே 22: சூலூரில் தேர்தல் அதிகாரிக்கே தெரியாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக 300க்கும் மேற்பட்ட வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.  சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் பாரதிபுரம் பகுதியில் சமுதாயக் கூடம் உள்ளது. இங்கு கடந்த 2016ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளாக 300க்கும் மேற்பட்ட வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.

 இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘இந்த சமுதாயக்கூடம் கடந்த 3 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கிறது. இதற்கு இரவு பகலாக தலா ஒரு பெண் போலீசார் கடந்த 3 ஆண்டுகளாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் சமுதாய கூடத்தை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்,’ என்றனர்.

இதுகுறித்து சூலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘‘பள்ளபாளையத்தில் வாக்கு இயந்திரங்கள் இருப்பது பற்றி தனக்கு தெரியாது’’ என்றார். சூலூர் வட்டாட்சியர் ஜெயராஜிடம் கேட்டபோது, ‘‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்கும் தகவல் எனக்கு தெரியாது.  இதுகுறித்து  அலுவலர்களிடம் நாளை விசாரித்து தெரிவிக்கிறேன்,’’ என்றார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் சூலூரில் தேர்தல் அலுவலர்களுக்கு சரியான தகவல் தெரியாமல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: