போக்குவரத்து எஸ்ஐ வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை, பணம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை வேலூர் வடக்கு காவல்நிலையம் அருகே துணிகரம்

வேலூர், மே14: வேலூர் வடக்கு காவல் நிலையம் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் போக்குவரத்து எஸ்ஐ வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் நகை, பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வீடு புகுந்து நகை, பணம் திருடுவது, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதேபோல் வேலூர், காட்பாடி பகுதிகளில் நகை பறிப்பு சம்பவங்களும் தொடர்கதையாக உள்ளது. சமீபத்தில் நடந்த திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட எந்த வழக்கிலும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் வேலூரில் போலீஸ் வீட்டிலேயே மர்ம நபர்கள் நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் வடக்கு காவல் நிலையம் பின்புறம் காவலர் குடியிருப்புகள் உள்ளன. இங்கு 70க்கும் மேற்பட்ட போலீசார் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இதில் சில குடியிருப்புகளில் உள்ளவர்கள் கோடை விடுமுறையை கழிக்க வெளியூர்களுக்கு சென்றுள்ளனர். இதனால் அங்கு சில வீடுகள் பூட்டி கிடக்கிறது. அதேபோல் இங்கு குடியிருக்கும் சத்துவாச்சாரி போக்குவரத்து எஸ்ஐ சண்முகம்(52), தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குடும்பத்துடன் ஆரணிக்கு சென்றார். மீண்டும் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 சவரன் நகைகள், ₹45 ஆயிரம் பணம், 1 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து வேலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் திருமால் வழக்கு பதிந்து எஸ்ஐ சண்முகம் வீட்டில் நகை, பணம் திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார். வேலூரில் 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும் வடக்கு காவல் நிலையம் அருகிலேயே, அதுவும் போலீசார் குடியிருக்கும் குடியிருப்புக்குள்ளேயே மர்மஆசாமிகள் கைவரிசை காட்டியிருக்கும் சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: