ஒடுகத்தூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்

ஒடுகத்தூர், ஜூன் 21: ஒடுகத்தூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் நேற்று கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் காடுகள் மற்றும் மலைகள் அமைந்துள்ளது. இங்கு மான், மயில், காட்டெருமை, காட்டுப்பன்றி, காட்டு முயல், பாம்பு உட்பட ஏராளமான வனவிலங்குகள் வாழ்கின்றன. பெரும்பாலான கிராமங்கள் வனப்பகுதிகளை ஒட்டியவாறு அமைந்துள்ளதால் அவ்வப்போது வனவிலங்குகள் ஊருக்குள் வருகின்றன. அதேபோல், வனவிலங்குகளை வேட்டையாட மர்ம நபர்கள் நாட்டுத்துப்பாக்கியுடன் இரவு நேரத்தில் காட்டு பகுதிகளில் வலம் வருகின்றனர். இதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு 9.30 மணியளவில் மேலரசம்பட்டு அடுத்த முள்ளுவாடி மலை கிராமத்தில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், அதே கிராமத்தை சேர்ந்த குமார்(39) என்பதும், சட்ட விரோதமாக வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர், அவரை பிடித்து வேப்பங்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து குமாரை கைது செய்து வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

The post ஒடுகத்தூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: