பிளாஸ்டிக் கவர் பயன்படுத்திய 26 கடைகளுக்கு அபராதம் பாஸ்ட்புட் கடைக்கு நோட்டீஸ் குடியாத்தத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை

குடியாத்தம், ஜூன் 22: குடியாத்தத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள் பிளாஸ்டிக் கவர் பயன்படுத்திய 26 கடைகளுக்கு அதிரடியாக அபராதம் விதித்தனர். குடியாத்தம் காமராசர் காலம் அருகில் உள்ள பாஸ்ட்புட் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஷவர்மாவை எலி தின்பது போன்ற புகைப்படம் நேற்று வாட்ஸ்அப்பில் வைரல் ஆனது. இதையடுத்து, கலெக்டர் உத்தரவின்படி சம்பந்தப்பட்ட கடையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி பழனிச்சாமி, குடியாத்தம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் அலி மற்றும் சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, கடையை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும் என உரிமையாளருக்கு அறிவுறுத்தினர். மேலும், கடையின் சுகாதாரம் மற்றும் வாட்ஸ்அப்பில் வைரல் ஆனது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினர். பின்னர், குடியாத்தம் புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், நேதாஜி சிலை சந்திப்பு, ஜிபிஎம் தெரு, கொச அண்ணாமலை தெரு, தினசரி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள டீக்கடை, பெட்டிக்கடை, ஹோட்டல், இனிப்பகம் ஆகிய கடைகளில் சோதனை நடத்தினர். இதில், 26 கடைகளில் இருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 15 கிலோ பிளாஸ்டிக் கவர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த கடைகளுக்கு மொத்தம் ₹3 ஆயிரத்து 600 அபராதம் விதித்தனர். தொடர்ந்து, குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன் விசாரணை நடத்தி வருகிறார்.

The post பிளாஸ்டிக் கவர் பயன்படுத்திய 26 கடைகளுக்கு அபராதம் பாஸ்ட்புட் கடைக்கு நோட்டீஸ் குடியாத்தத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: